ஆப்பிள்

மருத்துவ நன்மைகள்:

ஆப்பிள் தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக் கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிளை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும்.

மூளையில் சோர்வு இருக்காது. இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கும். பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு சக்தியையும் கொடுக்கும்.

ஆப்பிள் ஜூஸ்:

ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டு வந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும்.

இதய நோய் பாதிப்பு வராமல் காக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.`

ஆப்பிள் தோலில் உள்ள நன்மைகள்:

ஆப்பிள் பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப்பும், அதனோடு இணைந்த இரசாயனமும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக் கூடியது என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் பழத் தோலில் காணப்படுவது அர்சோலிக் அமிலமாகும். இது தசைகளை ஆரோக்கியமாகக் கட்டி எழுப்பக்கூடியது. இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது.

இதன் ஒட்டுமொத்த அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கும் என்பதுதான். முதுமை அடைகின்றபோது தசைகள் சோர்வடைவது அல்லது நலிவடைவது ஒரு பொதுவான பிரச்சினையாகும். வயதான காலத்தில் இது பல நோய்களுக்கும் காரணமாகின்றது.