உடலின் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் பச்சை சுண்டைக்காய்...


கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பல வித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப் படும். சுண்டைக் காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம். சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, செரிமானக் கோளாறுகள் குணமாகும். வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய செய்தி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும். எப்படி சுத்தப்படுத்துவது? காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி சமையலுக்கு உபயோகிக்கலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு விஷயங்களா என மலைக்க வைக்கிறது. நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் சுலபமாகவும், சீக்கிரமாகவும் விளையக்கூடிய ஒரு தாவரம் சுண்டைச் செடி. மகத்தான மருத்துவக் குணங்கள் கொண்ட சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துகளின் மொத்த குத்தகை என்றே சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்ட வியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய்கள் என எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது சுண்டக்காய். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதிலும் உண்டு. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்குண்டு. நரம்பு முடிச்சாவது இதை தொடர்ந்து உண்பதன் மூலம் சரியாகும். ஆண்மை,பெண்மை சிறக்கும். ஆன்ட்டி இன்ஃப்ள மேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது தெரியாது. சுண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவதில்தான் 100% சத்து. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களும் புண்களும் கூட ஆறும். தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின் வாய்ப் புண்களையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கக் கூடியது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள நல்ல குணங்கள் உதவக் கூடியவை. நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது கூட தெரியாது.எண்ணையில் பொறித்தால் 5 முதல் 10% மட்டுமே மிஞ்சும். சுண்டைக்காயை விதம் விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அத்தனையையும் சுண்டைக்காயிலும் செய்யலாம். அதை நாம் சமைக்கிற முறையின் மூலம் அதி சுவை மிக்கதாக மாற்ற முடியும். சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல மருந்துத் தயாரிப்புகளுக்கு உபயோகிக்கிறார்கள். பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் அதிகமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. வீட்டில் ஒரு சுண்டைக்காய் செடி வையுங்கள். அடிக்கடி உண்ணுங்கள். மருத்துவர் கட்டணம் இனி மிச்சம். ஆரோக்கியமான சிறந்த வாழ்வுக்கு பச்சை சுண்டைக்காய்.