கேழ்வரகு சோள உப்புமா


தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கேழ்வரகு, சோளம் வைத்து சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புட்டு செய்ய: ராகி மாவு - 50 கிராம் சோளம் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 50 மில்லி துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன் உப்புமா செய்ய : பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை : * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அடுப்பில் வாணலியை வைத்து சோளத்தைச் சேர்த்து வாசனை வரும் அளவு கருகாமல் வறுத்து ஆற வைக்கவும். * ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும். * ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக சூடாக்கவும். சூடானதும் அதில் சோள மாவு, ராகி மாவு, உப்பு, சேர்த்து, ஸ்பூனால் நன்கு கிளறி விடவும். மாவுக் கலவை தண்ணீர் பட்டு ஈரமாக இருக்க வேண்டும். மாவைப் பிசைய வேண்டாம். மாவை நாம் என்ன வடிவத்தில் வேண்டுமானாலும், பிடிக்கலாம் என்கிற பதத்துக்குக் கிளறி எடுக்க வேண்டும். * புட்டு ஸ்டீமரில் முதலில் ஒரு பங்கு துருவிய தேங்காய், மேலே ஒரு பங்கு புட்டு மாவு சேர்த்து மூடி போடவும். அடுப்பில் குக்கரை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். குக்கரை மூடி போட்டு விசில் போடும் இடத்தில் புட்டு ஸ்டீமரை வைத்து விடவும். குக்கரில் உள்ள தண்ணீர் சூடாக ஆரம்பிக்கும் போது தீயைக் குறைத்து பத்து நிமிடம் கழித்து புட்டு ஸ்டீமரை எடுத்துத் தனியாக வைக்கவும். * புட்டு ஸ்டீமரில் இருந்து புட்டை எடுத்து ஒரு தட்டில் போட்டு ஆற விடவும். உப்புமா செய்ய : * அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்த பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம் வதங்கியதும் உப்பு சேர்த்து புட்டில் கொட்டி கிளறிப் பரிமாறவும். * சூப்பரான சத்தான கேழ்வரகு சோள உப்புமா ரெடி. நன்றி : மாலைமலா்